கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!
இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது.
சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகளே திணறிவரும் வேளையில் இந்திய அரசு வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தீவிர மருத்துவ சிகிச்சை, வெளி நாட்டில் இருந்து பயணிகளை தொடர்ந்து சிகிச்சை கண்காணிப்புக்கு உள்ளாக்குவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்று இருப்பதாக அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் இந்த வைரஸ் பாதிப்பினால் அதிகபட்சமாக 24,000 உயிரிழிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக இத்தாலி நாட்டில் அதிகபட்சமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக பரவும் சூழல் இருப்பதால் காவல் துறையினர் மாவட்ட எல்லைகளையும் கிராம பகுதிகளையும் தீவிரமாக கட்டுக்குள் வைக்க முயன்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மக்கள் புரிந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் மருத்துவ அறைகளை தயார் செய்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அவசிய உபகரணங்களான உயிரை காக்கும் வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனை கருவிகளை வாங்குவதற்கும் 100 கோடி நிதி அளிக்கப்படுகிறது. அரசு மருத்துமனைகளிலும் மற்றும் அரசின் அனுமதியுடன் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் தேவைக்கு இந்த நிதி உதவும் என்று நம்புவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் கொரோனா பாதுகாப்பு சேவைகள் சில:
- புனே நகரத்தில் கொரோனாவால் பாதித்த நோயாளர்களை சிகிச்சை அளிக்க சுகாதார கட்டமைப்புகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகள் மேம்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
- கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் போரில் 200 க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனத்துடன் பஜாஜ் நிறுவனம் இணைந்து பணியாற்ற உள்ளது.
- நிதி உதவி மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டங்களை வகுத்து வருகிறது.
- இந்த சேவையை கிராம் மற்றும் நகரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.