காவலர்களின் வலியை அறிவீர்களா.?
கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்!
அரசு ரீதியாக இயங்கும் அனைத்து பிரிவு துறைகளுக்கும் விடுமுறை உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை வார்த்தையில் சொல்லாமல் வருடம் முழுக்க தனது பணியை செவ்வனே செய்யும் தமிழக காவல்துறையினர் எத்தனை நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை நம்மிடையே பலர் அறிவதில்லை என்றே கூறலாம்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தினாலும் அதை சரியாக ஒருங்கிணைக்கும் பணியில் போலீசார்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எங்கே எப்போது எந்த விபத்தோ, கட்சி கூட்டமோ, கலவரமோ எதுவாக இருப்பினும் காவலர்களால் அந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது. மேலும் பிரச்சினை வராமல் தடுப்பதும் காவல்துறைதான். கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசு உத்தரவிட்டும் அதை மதிக்காமல் பலர் வெளியில் சுற்றி நோயை பரப்பும் வகையில் காவலர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
இந்த அசாதாரண சூழலில் ஆரோக்கியமான உணவு? மற்றும் பணி செய்யும் இடங்களில் கழிப்பிட வசதி இல்லாமலும் தவிக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் வேதனையை பொதுமக்களாக இருக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை. இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்கள் கொசுக்கடி மற்றும் வெயில் போன்றவையால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் பணியில் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தால் அதனால் ஏற்படும் பணிச்சுமையையும் சமாளிக்க வேண்டும்.
காவலர் பணியில் சேர்ந்துவிட்டால் எந்த திருவிழா மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட விடுமுறை கிடையாது. மேலும் எளிதில் பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைத்துவிடாது. ஏதாவது திடீர் கலவரம் நடந்தால் இவர்களின் உடலுக்கும், உயிருக்குமான பாதுகாப்பு கேள்விக்குரியே. மேலே படத்தில் இருக்கும் காவலரைப் பாருங்கள் தொடர் பணியால் ஓய்வில்லாமல் உழைத்த களைப்பால் உறங்குகிறார். அவரது கைகள் முழுக்க கொசு கடித்த போதும் அவர் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மக்களுக்காக உழைக்கும் அரசுக்கும் காவல் துறையினருக்கும் பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆகவே, அனைவரும் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அவரவர் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். காவல்துறையினர் சில இடங்களில் வரம்பு மீறி நடந்திருக்கலாம் அல்லது அவர்கள் மீது சிலருக்கு முரண்பட்ட கருத்து கூட இருக்கலாம். இதையெல்லாம் விவாதிக்கும் நேரம் இதுவல்ல. ஆகவே அரசுக்கும் காவல்துறைக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்.