ஐபிஎல் போட்டிகளுக்கு செக் வைக்கும் கொரோனா : சமாளிக்குமா நிர்வாகம்!

0
165

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பலியானவர் எண்ணிக்கை 4500 தாண்டிவிட்டது.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த நோய்க்கிருமி தற்போது வரை 114 நாடுகளில் பரவி அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அபாயகரமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 29 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் இந்தப் போட்டிகள் நடைபெறுமா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொரோனா தோற்று மேலும் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஒரு மாதத்திற்கு வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்குள் வர விசா வழங்க தடை விதித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் மைதானத்திற்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வெளிநாட்டவர்களும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வரவில்லை என்றால் நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை போட்டிகள் நடைபெற்றாலும் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்று கூறிவருகின்றனர்.

Previous articleசோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
Next articleசிறந்த சிவ பக்தன் யார்? அர்ஜுனனின் கர்வத்தை உடைத்த ஸ்ரீகிருஷ்ணன்!