ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

Photo of author

By Jayachandiran

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதாக சட்டசபையில் தமிழக முதல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நிவாரண பொருட்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்க கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சில விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. ஒரே நேரத்தில் கூட்டம் குவியும் என்பதால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான டோக்கன் வழங்கப்படும், அதில் பொருட்களை வாங்க வேண்டிய தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா பொருட்கள் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளி விட்டு ஒரு தள்ளியே நாற்காலியில் அமர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களை வாங்கிச் சென்றனர். சில இடங்களில் பொருட்களை வாங்கும் பைகளுக்கு மட்டும் இடைவெளி விட்டுவிட்டு மக்கள் ஒரே இடத்தில் கூட்டாக காத்திருந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இதனையடுத்து தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 வீடு தேடி வரும் என்று கூறியுள்ளார். ஊரடங்கு மற்றும் சமூக விலகல் போன்ற காரணத்தால் ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருள் வாங்குவதற்கான மற்றும் முதல்வர் அறிவித்த நிவாரண பணத்தையும் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்களிலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.