தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! புதிதாக 7 பேருக்கு பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு. மேலும் புதிதாக ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகளே திணறிவரும் வேளையில் இந்திய அரசு வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தீவிர மருத்துவ சிகிச்சை, வெளி நாட்டில் இருந்து பயணிகளை தொடர்ந்து சிகிச்சை கண்காணிப்புக்கு உள்ளாக்குவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்று இருப்பதாக அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஏழு பேரும் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் , விழுப்புரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களாவர். தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த 74 பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார், ஆறு பேர் குணமடைந்தனர். கொரோனா தொற்று ஏற்பட்ட மீதமுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.