ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்பனை செய்த 99 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கைது நடவடிக்கையை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து மதுபான பிரியர்கள் பலரும் மது இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி சிலர் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக காய்ச்சப்படும் கெமிக்கல் நிறைந்த சாராயங்கள் கிராம பகுதிகளில் ரூ.50 லிருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுபான கடைகள் மூன்று வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருப்பதால் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் கள்ளச் சாராயம் சென்னை, வேலூர் பகுதிகளில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ட்ரோன் கேமிரா உதவியுடன் போலீசார் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை உடனடி கைது செய்யுமாறு டிஜிபி திரிபாதி மதுஒழிப்பு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் மதுஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ள சாராயம் விற்பனை செய்து தலைமறைவான பலரை போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில் இதுபோன்ற சமூக கேடான செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் சட்டத்திற்கு புறம்பாக காய்ச்சிய விஷ கள்ளச்சாராயம் குடித்து பலத் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.