கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

Photo of author

By Jayachandiran

கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உலகளவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸால்
9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து 1.93 லட்சம் பேர் மருத்துவர்களின் தீவிர மருத்துவ சிகிச்சையால் நல்ல முறையில் குணமடைந்துள்ளனர். பலாயிரம் பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் தவித்து வருகின்றனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பமான கொரோனா தாக்குதல் தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி தனது கோரதாண்டவத்தை ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஈரான் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உச்சகட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 12 ஆயிரம் பலியை தாண்டியது, பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது இதேபோன்று அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகளவில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோனோ இரண்டு வாரங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்திய பின்னரும் மக்கள் வெளியே சுற்றுவது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.