அடுத்த 3 மாதத்திற்கு கவனம் தேவை! சுகாதரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Photo of author

By CineDesk

கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா தன்னுடைய கோர முகத்தை வெளியில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரட்டி எடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் தாக்கல் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவது மக்களை பதற்றமடைய வைத்துள்ளது.

எனவே குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 9,10,11ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த வகுப்புகள் அனைத்தும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கூட ஒருநாளைக்கு ஆயிரத்தை கடந்து தொற்றுகள் உறுதியாகி வரும் இதே சமயத்தில், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 1,715 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கர்நாடகாவில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மைசூர், கலாபுராகி, பிதர், தட்சிணா கன்னட ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர், “கர்நாடகாவில் கொரோனா வைரஸின் பரவலில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதாகவும், அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் பிற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாகவே கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்குள் வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் தான் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.