வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!
ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழக இளைஞர் ஒருவருக்கு தொற்றுநோயாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை உண்டாக்கிய கரோனாவால் “சர்வதேச சுகாதார நிறுவனம் அவரசநிலை” என்று அறிவித்துள்ளது. இந்த புதிய வகையான நச்சு வைரஸை அழிக்க நேரடி மருந்துகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்கிற காரணத்தால் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் ஒரு நபருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருந்த காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கென்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பிறருக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டிலும் கரோனாவிற்காக தனி வார்ட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 நபர்களுக்கும் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சீவ்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஓமனில் இருந்த வந்த தமிழக நபரை பற்றிய முழுமையான தகவல் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. கரோனா பாதிப்படைந்த மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறிய போதிலும் பலருக்கு கரோனா பற்றிய அச்சம் இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் பொது மக்கள் தினமும் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்களும், அரசியல் தலைவர்களும் அறிவுரை கூறுகின்றனர்.