உலகை அச்சுறுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலக அளவில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசுக்கு
ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலந்தில் இருக்கும் பல்கலைக் கழகத்தை சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் 7 வது வகை வைரஸ் ஆகும். இதற்கு முன் இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் ஏற்கனவே 6 வகை வைரஸ்கள் பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாததால் வெளியில் பெரியதாக பேசப் படவில்லை. ஆனால் தற்போது பரவியுள்ள இந்த 7 வது வகையான கொரோனா வைரஸ் உலகை ஒட்டு மொத்தமாக அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இதற்கு முன் பரவிய 6-வது வகை கொரோனா வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்த ஹாலந்தை சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள், அதற்கடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸ் பரவியதும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகளின் அடிப்படையில் அதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து கொரோனா வைரசுக்கு தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சோதனையானது சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் வெற்றி கிடைத்துவிட்டால் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.