இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் 17 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களால் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது;

‘கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதத்திலேயே கொரோனா நோய் பரவலை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் தான், அதனால் அங்கு தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் மதுரை, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில் சிகிச்சைக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் தவறான தகவல்களை கண்டு பீதியடைய வேண்டாம்.
கொரோனா நோய் பரவலை விட வதந்தி என்கிற வியாதி தான் வேகமாக பரவுகிறது’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.