மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!
ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட்
இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கான படிவங்களை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படங்களுடன் சேர்த்து தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதன் பிறகு பயனாளிகள் அடையாள அட்டையை மின் அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் முகவரிகளைத் திருத்தவும், புகைப்படத்தை சேர்க்கவும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களை அனைத்து ஓய்வூதிய அலுவலகங்களிலும் அளிக்கும்படி யுனெடைட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை தருவதற்காக அலுவலகங்களுக்கு வரும் போது இந்த படிவங்களை அளித்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இதன் அடிப்படையில் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்வதுடன், புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளீடு காப்பீட்டு அதிகாரியை ஓய்வூதியர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவர்களிடமிருந்து படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப அளிக்க வேண்டும்.
இவ்வாறு கொடுக்கும் போது ஒப்புகைச் சான்றிதழை தவறாமல் பெற வேண்டும். இதனை அத்தியாவசிய பணியாகக் கருதி அனைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.