சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் மூன்றாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ள அதே நேரத்தில், தொற்றும் வேகமாக பரவி உயிர்களை பறித்து வருகிறது.
அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 24 மணி நேரத்தில், 21,932 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 808 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இதுவே அதிகபட்ச உயிரழப்பாக பதிவாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசியை முதன்முதலில் தயாரித்து, பயன்படுத்தி வரும் ரஷ்யாவில் உயிரிழப்பு அதிகரித்து வருவது, அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.
அந்நாட்டில், தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 1,68,049 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யாவில் மூன்றாம் அலை கொரோனா, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் பாதிப்பு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது. இதனைத் தடுக்க அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருப்பது தான் ஒரே வழி. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நியூஸ்4தமிழ் கேட்டுக்கொள்கிறது.