விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

0
103
  1. விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும் சிலர் விதவிதமான போட்டோக்கள் எடுப்பதும் நடப்பதுண்டு.

சில நேரங்களில் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரிக்கும். அப்போது தீயணைப்புத் துறையினர் அல்லது லைஃப் கார்டுகள் தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவர்.

ஆனாலும் இந்த கடற்கரையில் நள்ளிரவு வரை கடலுக்குள் உள்ள பாறையில் காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர். தற்போது மழைக்காலம் என்பதால் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிறது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கடலுக்குள் இருக்கும் பாறைக்கு மக்கள் சென்று வந்து கொண்டிருந்தனர்.

அதேபோன்று ஜோதி சொனார் வயது 27. என்ற பெண் கணவர் முகேஷ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பாந்திரா கடற்கரைக்கு சென்று இருந்தார்.

கடற்கரையில் குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்த அவர் பின்னர் குழந்தைகளை விட்டுவிட்டு கடலுக்குள் இருக்கும் பாறையில் அமர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் தனது கணவருடன் சென்றுள்ளார். அங்குள்ள பாறைகளில் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் பாறைகளில் மோதி இவர்கள் இருவர் மீதும் பட்டு சென்றது. குழந்தைகள் கடற்கரையில் இருந்து பயத்தில் அம்மா வாருங்கள் என்று கத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இருவராலும் உடனடியாக அங்கிருந்து வர முடியாத அளவுக்கு கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் இருந்தது.

ஒரு கட்டத்தில் பாறையில் அமர்ந்திருந்த இருவரையும் ராட்சச அலை ஒன்று வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. குழந்தைகள் கடற்கரையில் இருந்து கத்தி கூச்சல் போட்டனர். கடல் அலையில் இருந்து ஜோதியின் கணவரை மட்டுமே லைஃப் கார்டுகளால் காப்பாற்ற முடிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோதி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது உடல் சுமார் 20 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. கணவன் மனைவி இருவரும் கடலுக்குள் அலைகளால் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபரீதமாக செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசையினால் அநியாயமாக மூன்று குழந்தைகள் தாயில்லாமல் அனாதையாயின.