கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

Photo of author

By CineDesk

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, மந்தீப் கவுர் என்ற பெண்ணும், அவரது கணவருமான ஜெஸ்வீந்தர் சிங் என்ற தம்பதிகள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த தம்பதிகள் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாக திட்டமிட்டிருந்தனர். இதை தடுக்கும் விதமாக இவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த தம்பதிகள் உத்தரகாண்ட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகீப் சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த போலீசார் உத்தரகாண்ட் வழிபாட்டு தலத்திற்கு சென்றனர்.

அங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், போலீசார்கள் குற்றவாளிகளை பிடிக்க திட்டம் ஒன்றை செயல்படுத்தினர். எனவே மாற்று வேடம் அணிந்து அங்கே வரும் பக்தர்களுக்கு 10 ரூபாய் மதிப்புள்ள பழச்சாறை இலவசமாக பக்தர்களுக்கு வழங்கினர். இதில் உள்ளூர் போலீசார்களும் இணைந்து செயல்பட்டனர்.

அப்போது இந்த பழச்சாரு வாங்க வந்திருந்த பஞ்சாப்பில் கொள்ளையடித்து சென்ற தம்பதிகளான மந்தீப் கவுர் மற்றும் ஜெஸ்வீந்தர் சிங்கை போலீசார்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

இவர்கள் கொள்ளையடித்து சென்ற 8 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாயை இதுவரை போலீசார்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த குற்றவாளி தம்பதியை பஞ்சாப்பிற்கு அழைத்து வரவும் முடிவு செய்துள்ளனர்.