14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி வளாகத்திற்குள் வைத்து மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் சில அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, மாணவி நேஹாவின் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் தான் அதிகளவில் கத்திக் குத்து விழுந்துள்ளது. மொத்தமாக அவர் உடலில் 14 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் கழுத்துப்பகுதியில் மட்டும் 5 செமீ ஆழத்திற்கு மிகவும் ஆழமாக கத்தி இறங்கியுள்ளது.
இதனால், நேஹாவின் கழுத்தில் இருந்த மூச்சுக்குழாய் மற்றும் ரத்த நாளங்கள் அறுந்து வெறும் 58 வினாடிகளில் பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். நேஹாவை கத்திக்குத்து பட்ட உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவருக்கு இதயத்துடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 58 வினாடிகளில் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று தேர்வெழுதி விட்டு வெளியே வந்த நேஹாவை அவரின் சக மாணவரான ஃபயாஸ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். முன்னதாக ஃபயாஸின் காதலை நேஹா ஏற்காத ஆத்திரத்தால் தான் அவர் இப்படி செய்திருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தை லவ் ஜிகாத் என்று கூறி கர்நாடகாவில் பெரிய மத அரசியல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.