கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி?
உலர் மீன்(கருவாடு) வைத்து சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
தேவையான பொருட்கள்:-
*கருவாடு
*சின்ன வெங்காயம்
*கொத்தமல்லி விதை
*வர மிளகாய்
*தேங்காய் துருவல்
*மிளகு
*வெள்ளை உளுந்து
*தக்காளி
*கறிவேப்பிலை
*கடலை பருப்பு
*வெந்தயம்
*உப்பு
*மஞ்சள் தூள்
*புளி கரைசல்
*பெருங்காயத் தூள்
செய்முறை
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம் 1/4 கப் அளவு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் 5 வரமிளகாய், 1 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி வெந்தயம், 1/2 ஸ்பூன் மிளகு மற்றும் 2 ஸ்பூன் மல்லி விதை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.
எண்ணெயில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்கு வதங்கி வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதில் துருவிய தேங்காய் 1/4 கப் அளவு சேர்த்து கிளறி ஆற விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அவை சூடானதும் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம் 1/4 கப் அளவு சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி ஒன்று மற்றும் கறிவேப்பிலை 1 கொத்து சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் கருவாட்டை சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மற்றும் பெருங்காயத் தூள் 1/2 ஸ்பூன் அளவு சேர்த்து வதக்கவும்.
அடுத்து ஒரு கப் அளவு புளிக்கரைசலை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
மிக்ஸி ஜாரில் வதக்கி ஆற வைத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை கொதிக்கும் கருவாட்டு கலவையில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கருவாட்டு குழம்பு நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து கருவாட்டு குழம்பை இறக்கவும். சூடான சாதத்தில் இந்த கருவாட்டு குழம்பை வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.