திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

Photo of author

By Parthipan K

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

2021 சட்டமன்ற தேர்தல் தேதியை ஏப்ரல் 6 என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை நடத்தி கொண்டு வருகிறது.

அதிலும் முக்கியமாக அதிமுக கூட்டணியில் பாமகவினர் கேட்ட வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.அதனால் நேற்றே தொகுதி பங்கீடு முடிவடைந்தது, அதிமுகவின் கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமகவின் இளைஞரணி தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பெற்றதால் நாங்கள் அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளை பெற்றுக் கொண்டுள்ளோம். பெற்ற இந்த தொகுதியில் கடினமாக உழைத்து வெற்றி காண வைத்து அதிமுக அரசை மீண்டும் ஆட்சி செய்ய வைப்போம் என்று கூறி இருந்தார்.

இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கூறுகையில் அதிமுக அரசு கொடுத்த தொகுதியில் அனைத்திலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியிருந்தார்.

அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய கட்சியான பாமகவின் தொகுதி பங்கீடு முடிவடைந்ததால் அடுத்து தேமுதிக கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகிறது அதிமுக தலைமை.

இதற்காக நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்திக்க அதிமுக அரசின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி வேலுமணி போன்றவர்கள் சென்றனர். தேமுதிக கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.

இதே போல் திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு நடைபெற ஆரம்பித்துள்ளது. டி ஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவில் இன்று முஸ்லிம் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நடைபெற போகிறது. அதே போல் நாளை மதிமுக மற்றும் விசிக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நடைபெற போகிறதாம்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் அவர் மீண்டும் சென்னைக்கு வந்தவுடன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் கலந்து ஆலோசித்து இன்னும் இரு தினங்களில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு முடிவடையும் என்றே கருதப்படுகிறது.

மார்ச் 12 வேட்புமனுத் தாக்கல் ஆரம்பிக்கப் போவதால் அனைத்து கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 என்பது குறிப்பிடத்தக்கது.