3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

Photo of author

By Divya

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பார்வையிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசை கடுமையாக சாடி பேசினார். பெருமழை வெள்ளத்தால் சாலை, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 3 நாட்களாக குடிக்க தண்ணீர்,உண்ண உணவு இல்லாமல் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு முன் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடிக்கு சென்றேன். அங்குள்ள மக்கள் 3 தினங்களாக உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்று திமுக அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டினர். அதுமட்டும் இன்றி உரிய மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்கவில்லை என்று மனக் குமுறலை வெளிப்படுத்தினர். மக்கள் 3 தினங்களாக உணவு இல்லாமல் பரிதவித்து வருவதை பார்க்கும் பொழுது திமுக எந்தளவிற்கு மக்கள் மீது அக்கறை செலுத்துகிறது என்பதை பார்க்க முடிகிறது.

மக்கள் இவ்வாறு துயரப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அரசு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது? மக்களுக்கு ஒருவேளை உணவு கூட வழங்க முடியாத திமுக என்ன ஆட்சி நடத்துகிறது? இனியும் தாமதிக்கலாம் மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.