தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு இரு தினங்கள் விடுமுறை என்பதால் நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
திங்கட்கிழமையான நேற்று வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கமல், வானதி சீனிவாசன், சீமான் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்தனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்க உள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நல்ல நேரம் பார்த்து புதன் ஹோரையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தல் ஆணையத்தில் உத்தரவின் படி வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன் படி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பை பார்க்கும் போது அப்பா ஸ்டாலினை விட அவருக்கு தான் பலமடங்கு சொத்து அதிகமிருப்பது தெரியவந்துள்ளது. உதயநிதியின் அசையா சொத்து மதிப்பு ரூ.5.37 கோடி, ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளூரில் விவசாய நிலம் உள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு 22.28 கோடி. ஆக உதயநிதியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 22.28 கோடி.
உதயநிதி கடன் ரூ.1.35 கோடி வாங்கியுள்ளாராம். 2019-20 ல் வருமான வரி 4.89 லட்சம் தாக்கல் செய்துள்ளார். மனைவி கிருத்திகாவின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சம் ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகனுடன் கம்பேர் செய்யும் போது அப்பா ஸ்டாலினின் சொத்து மதிப்பு பல மடங்கு குறைவாகவே உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் சொத்து மதிப்பு கடந்த 2016ம் ஆண்டை விட ரூ.3 கோடி மட்டுமே உயர்ந்துள்ளது. ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மொத்த சொத்து மதிப்பு ரூ.4.94 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அசையா சொத்து மதிப்பு 1.17 கோடி எனவும், மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.