பாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு
திமுக கூட்டணிக்கு பாமக தேவையில்லை எனவும், அக்கட்சி வலிமையாக உள்ள வட மாவட்டங்களில் வன்னியர் மக்களின் ஆதரவை பெற திமுக மாற்று திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி என்பது கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறலாம். குறிப்பாக அங்கு இன்னும் தொகுதி பங்கீடு செய்வது மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் பாமக கட்சிகள் இன்னும் யாருடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.
அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் பாமக சட்டமன்ற தேர்தலிலும் தொடர அக்கட்சியின் தரப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக நின்ற பாமக தற்போது உள் ஒதுக்கீடு என்பதற்கு சம்மதம் தெரிவித்ததால் இருகட்சிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
அதாவது சில நாள்களுக்கு முன்பு அதிமுகவின் இரு முக்கிய அமைச்சர்கள் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தைலாபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த பாமக சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் தனி இட ஒதுக்கீடு என்ற கொள்கையிலிருந்து இறங்கி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.
அவரின் இந்த கோரிக்கையை ஏற்கும் விதமாக அடுத்ததாக அதிமுக முக்கிய அமைச்சர்கள் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார்கள்.இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும்,மேலும் பொங்கலுக்கு பின்னர் பேச்சுவார்த்தை தொடரும் என்றும்,குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை என்றும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிட்டதட்ட பாமக – அதிமுக கூட்டணி உறுதியானது என்றே கூறலாம்.
வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை கொண்ட பாமக எதிர் கூட்டணியில் உள்ளதால் அக்கட்சியின் வாக்கு வங்கியான வன்னிய சமுதாய மக்களின் ஆதரவை பெற திமுக தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. அந்த வகையில் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் வன்னியர் சங்க தலைவருமான மறைந்த காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மகன் கனலரசனை வைத்து பாமக போட்டியிடும் இடங்களிலெல்லாம் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் அரியலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காடுவெட்டி ஜெ குரு அவர்களின் இல்லத்திற்குச் சென்று ஜெ குரு அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வந்தார்.
மேலும் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகனையும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.இதற்காக அவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.அதே போல திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் அவர்களும் வன்னியர் வாக்குகளை பெற உதவுவார் என்பதால் அவருக்கும் இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரப்போவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாது பாமக கைவிட்ட வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்றும், திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப் போகிறார்களாம்.ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.