நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து வருட காத்திருப்புக்கு பின் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை தான், அந்த வகையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் கைபற்றி திமுகவின் ஆட்சிக்கு வலு சேர்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடையே அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இதனிடையே வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி திமுகவின் முன்னாள் தலைவரும் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து மிகவும் வலுவான நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெறுவது என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் திமுக சார்பில் ஒரு பார்வையாளர் என நியமித்து அவர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இன்று அனைத்து பார்வையாளர்களுடன் காணொளி காட்சி மூலம் முக்கிய ஆலோசனையும் நடத்தினார். இந்த ஆலோசனையில் மக்களிடம் அரசின் மக்கள் நல திட்டங்கள் பற்றி எடுத்து சொல்ல ஏற்பாடு செய்திட வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்றிட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அனைவரும் செயலாற்றிட வேண்டும், மேலும் தொகுதிகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.