ஹாட் வாட்டர் குடித்தால் உடல் வலிமை பெறுமா?
தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் நம்மால் பெற முடியும். மருத்துவர்கள் தண்ணீரை வெந்நீராக குடித்து வரலாம் என்று கூறுகின்றனர்.
தண்ணீரை குடிக்கும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என அக்காலத்தில் ஆரோக்கியமான முறையில் நீரை குடித்து வந்தனர். பிரிட்ஜ் மற்றும் பிளாஸ்டிக் குடங்களை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது சிறந்தது என்கிறார்கள்.
முதல் விஷயம் நாம் குடிக்கும் நீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் அதிகமாக சுடு தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர். இந்த பழக்கத்தை எல்லா நேரங்களிலும் செய்வது இன்னும் நல்லது. இதனால் நீர் வழியாக பரவும் எந்த கிருமிகளும் நம்மை தாக்காது. எனவே குழந்தைகள் பெரியவர்கள் வீட்டில் இதை கடைபிடிப்பது நல்லது.
சுடு தண்ணீர் பொதுவாகவே செரிமான சக்தியை தூண்டுகிறது. அதுவும் சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பாக காய்ச்சிய நீரை பருகினால் செரிமானம் எளிதில் நடைபெறும். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் இருக்காது.