குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதைப்பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் குடிநீரில் இறங்கி வித்தியாசமான குளியல் போராட்டத்தை செய்தார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த தமிழக அரசு வீட்டுக்கு வீடு மழைநீர் தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இருந்தும் பல இடங்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் எண்ணம் தமிழக மக்களிடையே ஏற்படவில்லை என்றே கூறலாம்.
மக்களைப் போலவே மாநகராட்சியும் தண்ணீர் விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தால் என்ன செய்வது. திருப்பூர் அவிநாசி சாலை பங்களா பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாவதை பற்றி புகார் அளித்தும், திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்னும் சமூக ஆர்வலர் குளம் போல் தேங்கிய நீரில் இறங்கி சோப்பு போட்டு குளித்து வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார். இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாநகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சமூக ஆர்வலரின் அக்கறையை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.