கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார்.
ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பாஜகவுடன் கூட்டணியும் வைத்துவிட்டார். இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. இது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக முடியுமா என்பது தேர்தல் ரிசல்ட்டில்தான் தெரியவரும்.
ஒருபக்கம் சமீபகாலமாகவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசை திட்டி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதோடு, சட்டசபையில் பல விஷயங்களையும் பேசி கேள்விகளை எழுப்பி வருகிறார். இதில் ஸ்டாலினுக்கும், அதிமுகவினருக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கிறது. இது ஸ்டாலினிக்கே தலைவலியாக இருந்து வருகிறது. இன்று சட்டசபையில் பேசிய ஸ்டாலின் 2026 வருடமும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான். இதுவரை மக்கள் பார்த்தது ஒரு வெர்ஷன்தான். அடுத்து பார்க்கபோவது 2.0. வெர்ஷன் 2.0 லோடிங் என பேசியிருந்தார்.
இந்நிலையில், பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி!, போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!
ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று Version 2.0 Loading ஆம்! அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே version தான்.. அது அதிமுகversion தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய ‘ஓ’ (0) வாக போட்டு பைபை ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி’ என பதிவிட்டிருக்கிறார்.