காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?
கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர், இயற்கையின் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் எதிர் நீச்சலோடு விவசாயம் செய்து வருகிறார்கள். ஆகையால், இந்த விவசாய நிலப்பகுதிகளை தமிழக வேளாண் நலன் கருதி பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறவித்தார்.
இது வெற்று அறிவிப்போடு மட்டும் இல்லாமல் இதற்குரிய சட்ட வல்லுனர்களோடு கலந்துரையாடி இதற்காக தனிச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கும் திட்டம் குறித்த, முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு பொது மக்களிடையே மகிழ்ச்சியையும்,பெரும் ஆதரவையும் கொடுத்துள்ளது.
தமிழக அரசின் வேளாண் மண்டல அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி அமைத்தது. அந்த பத்து அம்ச கோரிக்கையில் முதல் கோரிக்கைதான் இந்த காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டல அறிவிப்பாகும்.
இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் ராமதாஸ் இருக்கக்கூடும் என்று ஒரு கருத்து நிலவுவதோடு மட்டுமல்லாமல், இது பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறப்படுகிறது. மேலும், வேளாண் மண்டல அறிவிப்பு சம்பந்தமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.