வளரும் தலைமுறையினர் உலகம் முழுவதும் சாதனை செய்ய கல்வி தான் காரணம்! அடிக்கல் நாட்டு விழாவில் மாலேசிய அமைச்சர் பேச்சு!
தமிழக மக்களின் கல்வித்தரம் உயர மலேசியாவில் உள்ள தமிழ் உறவுகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என மலேசிய நாட்டு மனிதவள அமைச்சர் சரவணன் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் பேச்சு
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அல் ஹத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் மலேசிய மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முப்பெரும் விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
அல்ஹிக்மா தீன்சக்கீனா ஆலிமா 8 வது பட்டமளிப்பு விழா, அல்ஹிக்மா மாஹ்ஸா ஹாஜி அப்துல்லாஹ் ஹஜ்ஜா ஸைத்தூன்பீவி மாணவிகள் தங்கும் விடுதி திறப்பு விழா மற்றும் சிபிஎஸ்இ பள்ளி அடிக்கல் நாட்டுதல் என முப்பெரும் விழா உத்தமபாளையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மலேசிய அமைச்சர் சரவணன், மார்க்க கல்வி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பட்டங்களையும் வழங்கி திருக்குர் ஆன் மற்றும் திருக்குறள் நன் முறைகளிலிருந்து மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார் .
மேலும் விழாவில் மலேசியா மாஹ்ஸா மருத்துவ பல்கலைக்கழக நிறுவன வேந்தர் முகம்மது ஹனீபா மலேசிய மனிதவள அமைச்சக தலைமைச் செயல்முறை அதிகாரி ஷாகுல்ஹமீத் மற்றும் மலேசிய தொழிலதிபர் முகம்மது மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தனியார் பள்ளியின் தாளாளர் ரஃபீக்தீன் செய்திருந்தார் .
இது குறித்து மலேசிய அமைச்சர் கூறுகையில், ” வளரும் தலைமுறையினர் உலகம் முழுவதும் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். இந்த கால தொழில்நுட்பம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான பள்ளிப்படிப்பு வசதிகளை செய்துதர தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மலேசிய நாட்டு மக்கள் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக” தெரிவித்தார்