தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!
சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் டி.மனோ தங்கராஜ், பல்வேறு திறமைகள் இருந்தாலும் இளைஞர்கள் ஆங்கிலத்தில் சரியாக பேச முடியாத காரணத்தால் வேலைவாய்ப்பு பெற சிரமப்படுகின்றனர்.
இதை சரி செய்ய மாவட்டம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்காக நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் மூலமாக கல்வி தரம் மற்றும் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழக அரசு எதிர்கால முன்னேற்றத்திற்காக அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளை மேம்படுத்தி வருகிறது. கல்வியின் மூலம் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று இவ்விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கும் மற்றும் சிறப்பாக செயலாற்றி வரும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் விருதுகளை வழங்கி வந்தார்.
இவ்விழாவில் இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு கல்விக்குழு ஒருங்கிணைப்பாளரான அசோக் ஜீ.வர்கீஸ், மற்றும் எப்.ஐ.சி.சி.ஐ-இன் தமிழ்நாடு மாநில கவுன்சில் துணைத் தலைவரான பூபேஷ் நாகராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் முதலிய பலரும் இதில் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.