லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்!
லாரியில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற தொழிலாளி அதில் உள்ள ராட்சத காந்தத்தில் சிக்கி உயிரிழந்தார். சோகமான இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பெற்றுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக் கோட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து சுமார் 10 டன் எடை கொண்ட ராட்சத காந்தம் கனரக லாரி மூலம் கரூர் கொண்டுச் செல்லப்பட்டது. லாரியை பாபு என்ற டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த லாரியானது ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சந்திப்பில் வல்லக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த முருகேஷ் வயது 49 , என்பவர் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
இதையடுத்து சிறிது தூரம் சென்றதும் சாலையில் சிறு பள்ளம் ஒன்று தென்படவே பள்ளத்தில் லாரியின் சக்கரம் இறங்காமல் இருக்க டிரைவர் பாபு பிரேக் பிடித்தார். திடீரென பிரேக் பிடித்து அதிர்வில் லாரியின் பின்னால் இருந்த ராட்சத காந்தம் வேகமாக முன்னால் நகர்ந்தது. இதில் சிறிய இடைவெளியில் அமர்ந்திருந்த முருகேஷ் மீது ராட்சத காந்தம் மோதியதில் அவர் சிக்கிக்கொண்டார்.
இதனால் உடனடியாக டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்ரீ பெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காந்தத்தின் நடுவில் சிக்கியிருந்த முருகேசனை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் முருகேஷை சோதனை செய்ததில் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. அடுத்ததாக உயிரிழந்த முருகேசன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.