உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த பகுதிகளில் கனமழை: -வானிலை ஆய்வு மையம்!!

Photo of author

By Parthipan K

உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த பகுதிகளில் கனமழை: -வானிலை ஆய்வு மையம்!!

நேற்று முன்தினம் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது.

மேலும், இந்த தாழ்வு மண்டலமானது இன்று (வெள்ளிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.