இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!
2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார்.
அதிமுக தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ், அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கின் தீர்ப்பு எடப்பாடியாருக்கு சாதகமாகவும், ஓபிஎஸ்க்கு பாதகமாகவும் மாறிப்போனது.
அதன் பின்னர் அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு பேரிடி வந்து விழுந்தன.
கட்சி பெயர், சின்னம் உள்ளிட்ட அதிமுக தொடர்பான எதையும் பயன்படுத்த முடியாதவாறு தீர்ப்பு வரவே அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஓபிஎஸின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கையை விரித்து விட்டது. இதனால் ஓபிஎஸ் மீது பெரிய இடியே இறங்கிவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக தீர்ப்பு வந்ததை அதிமுக வரவேற்கின்றது. ஓபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி… அதிமுகவில் பல குழப்பங்களை ஏற்படுத்திய துரோகிகளுக்கு அதிமுகவில் இடம் இல்லை. இபிஎஸ் – ஓபிஎஸ் ஒன்றிணைவது என்பது கனவிலும் நடக்காது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.