பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

0
260

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் கன மழை பெய்து வருவதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்ட்டிற்கு விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதோடு ஒரு ஏக்கருக்கு 30, 000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித் தனி தீவுகளாக காட்சியளிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இக் கனமழையில் மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட னைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற ஆண்டு பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை, வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி, கணக்கெடுப்பு நடத்தத் தவறியதால், கணக்கெடுப்பில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பல பகுதிகள் கணக்கெடுப்பில் விடுபட்டுவிட்டன என்று புகார்கள் வந்தன.

ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு கட்டணமாக ரூ. 300/- என்று இருக்கும்போது, தி.மு.க. அரசு பயிர் காப்பீட்டு நிவாரணமாக பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 250/- மட்டுமே பெற்றுத் தந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறியதையும் நான் எனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அப்படி, அறைகுறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கூட இதுவரை 80 சதவீத விவசாயிகளுக்கு சென்ற ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு நிவாரணம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இச்சூழ்நிலையில், விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு ஒரு மாத காலத்திற்குள் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தங்களுடைய உழைப்பு வீணாகிப் போய்விட்டதே என்றும், தாங்கள் மேலும் கடன்காரர்களாக மாறிவிட்டோமே என்றும், தங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதே என்றும் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் தங்கள் மனக்குமுறலை எடுத்துரைக்கின்றனர்.

இதுவரை தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முழுமையாக பார்வையிட்டு வேளாண் பெருமக்களுக்கு எந்தவிதமான ஆறுதலையும் சொல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் 15.11.2022 என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளிடம் நேரில் சென்று, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர, காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்தாண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன்.

மேலும், தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து!
Next articleகல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here