திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவுத் துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது.அந்த வகையில், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பதிவுத்துறையின் சேவைகளான, பத்திரப்பதிவு, பத்திரத்தை திரும்ப பெறுவது, திருமணத்திற்கான பதிவு, திருமண சான்றிதழ், வில்லங்க சான்றிதழ், பத்திர நகல் வழங்குதல், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சங்கம் பதிவு, சீட்டு பதிவு, கூட்டான்மை, நிறும பதிவு, வழிகாட்டி மதிப்பு மேலும்,
பத்திரப்பதிவுத் துறையால் பெறப்படும் பல்வேறு சேவைகளுக்கான புகார்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள பதிவு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.இந்த முகாம் முழுக்க முழுக்க பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட இருக்கிறது.
இந்த குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அல்லது துணை பதிவுத்துறை தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளார்.
இதனால் மக்களிடம் நேரடியாக மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், பத்திரப்பதிவுத்துறையில் தற்போது சேவை கட்டணம் உயர்ந்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இனி வில்லங்க சான்றிதழ்களை ஆன்லைனில் தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.