முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தற்சமயம் தெரியவந்திருக்கிறது.
திருநெல்வேலியைச் சார்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மற்றும் தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அதனடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கிடைத்த தகவல் போன்றவற்றில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒட்டுமொத்தமாக 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு ஆணையர்களின் விசாரணை மட்டும் இன்னும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரையில் 154 நபர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறது. அதற்காக 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் செலவிடப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆணையத்தின் விசாரணை இதுவரையிலும் முழுமை பெறவில்லை 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தின் கால வரையறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது 2018ஆம் ஆண்டு முதல் இந்த விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 550 ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.