தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் இவரது மனைவி அனிதா வயது 30.
டேவிட்-அனிதா தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி அனிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் அவருக்கு போன் செய்தபோது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால் அவர்கள் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீசார் சைபர்கிரைம் உதவியுடன் அனிதாவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர்.
அதில், அனிதா கடைசியாக எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக்கிடம் செல்போனில் பேசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக்கும் அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்து புதைத்து உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட அனிதாவும், கார்த்திக்கின் மனைவி சத்யாவும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம். மேலும், இருவரும் ஒரே ஊரில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். அனிதாவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பொழுதுபோக்கிற்காக கார்த்திக் அடிக்கடி அனிதாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
மேலும், அனிதாவிடம் இருந்து சத்யாவும் அவரது கணவர் கார்த்திக்கும் 10 பவுன் நகை மற்றும் பல லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அனிதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்ப உள்ளதால் கொடுத்த பணம் மற்றும் நகைகளை சத்யாவிடம் திரும்பி கேட்டுள்ளார். இதனை அடுத்து அவற்றைத் திருப்பிக் கொடுப்பதாக கூறி கடந்த 12ஆம் தேதி கார்த்திக் அனிதாவை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அப்போது, சத்யா கணவன் கார்த்திக், கார்த்திக்கின் தந்தை ரங்கநாதன், மற்றும் சத்யாவின் அண்ணன் சரவணன் ஆகியோர் சேர்ந்து அனிதாவை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த சடலத்தை ஊருக்கு வெளியே உள்ள கருவேலங்காட்டில் புதைத்துள்ளனர். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட திருப்பனந்தாள் காவல்துறையினர் மேற்கண்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.