இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

Photo of author

By Anand

இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் சூழல் நிலவியது.

இதனால் கிராமியக் கலைகள், தெருக்கூத்து உள்ளிட்ட தொழில்களும் நலிவடைந்தன. இந்நிலையில் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை பேருந்துகளில் கொண்டு செல்ல கட்டணம் வசூலிப்பது அவர்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அதை தளர்த்திவிட்டது.

அரசு போக்குவரத்துக்கழகம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாட்டுப்புற கலைஞர்கள்

அதை ஏற்று, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள், அரசு பேருந்தில் தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50 சதவீத பயணக் கட்டண சலுகை பெறலாம்.

கருவிகளுக்கு இலவசம்

அவர்கள் எடுத்து வரும் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உருமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

இலவச கட்டண சலுகை

அவர்களின் சலுகை கட்டண பயணம், எடுத்துச் செல்லும் கருவிகளின் விபரங்களை வழிப்பட்டியலுடன் இணைத்து அலுவலகத்தில் கண்டக்டர்கள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயணத்தை, மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட பேருந்துகளிலும் அனுமதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாட்டுப்புற கலைஞர்கள் மகிழ்ச்சி

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாடகக் கலைஞர்கள் இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் பொருட்களை இலவசமாக எடுத்துச்செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது