இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!
நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது.
நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். இது முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பாலகொலா பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள 2.29 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 439 டன் கேழ்வரகும், தருமபுரி மாவட்டத்திலுள்ள 4.66 குடும்ப அட்டைகளுக்கு 932 டன் கேழ்வரகும் வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு 1350 மெட்ரிக் டன் கேழ்வரகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கேழ்வரகு விளைச்சலை பொறுத்து இத்திட்டம் மற்ற மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் என கூறப்படுகிறது.