முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம்
“காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், பள்ளி மாணவர்களை தரம் தாழ்ந்து குறிப்பிட்டுள்ளது, கோபமடைய செய்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என தொடர்ந்து அடுத்தடுத்தது கண்டனங்களை தங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தினமலர் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்திக்கும், தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என இந்நாளிதழ் தனது தனது இணையத்தள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்திய முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு- சேலம் ‘தினமலர்’ பதிப்பில் இன்று ( ஆகஸ்ட் ) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க, வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும், கி. ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது, திரு. சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த, 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு – சேலம் தினமலர் பதிப்பினையும், அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் இதுகுறித்து நிச்சியம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினமலர் நாளிதழ் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.