ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்!
கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.
ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அசைவ உணவுகளை சமைத்து உண்பது வழக்கம். கோழிக்கறி, ஆடு கறி, ஏன் மாட்டுக் கறி உட்பட பல வகையான அசைவ உணவுகளை ருசி பார்ப்பார்கள். விரதம் இருந்து, இறைவனை வேண்டி பின்பு அசைவ உணவுகளை உண்பர்.
இந்த அசைவ உணவுகள் இஸ்லாமியர்கள், பிறருடன் பகிர்ந்தும் அன்பை வெளிப்படுத்தியும் ரம்ஜான் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
மேலும், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோழி இறைச்சிக் கடைகள், ஆட்டு இறைச்சிக் கடைகள் என இறைச்சிக் கடைகள் களைக்கட்டும். இந்த திருநாளின் போது ஒவ்வொரு ஆண்டும் ஆட்டுச் சந்தையில் கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனையாகும்.அதுபோல இந்த ஆண்டும் தமிழகத்தின் சேலம், சிவகங்கை, ராணிப்பேட்டை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்று. இந்தச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது. கிடா ஒன்று 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கொங்கணாபுரம் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 9,000 ஆடுகள் மற்றும் 160 டன் காய்கறிகள் விற்பனையானது. ஏறத்தாழ 6 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்றது.