என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!
இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன.
இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறையாவது மோத வேண்டும். இதன் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளன.
இதையடுத்து இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான 3-வது ஆட்டத்தில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி 121 ரன்கள் எடுத்து ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்லதொரு துவக்கத்தை தொடங்கி வைத்தனர். இதனால் ஓப்பனிங் பார்டனர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை கடந்தது.
இதில் ரோகித் சர்மா 56 ரன்களும், கில் 58 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கள நடுவர்கள் ஆய்வு செய்த போது மைதானம் மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று இன்று நடைபெற உள்ளது. தற்போது விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ள நிலையில் இன்று 3 மணி அளவில் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் நேற்று பேசும் பொழுது, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலியை கடந்து சென்றேன். அப்பொழுது அவரிடம் இப்போது எல்லாம் என்னுடைய கனவில் நீங்கள் வருகிறீர்கள் என்று கூறியதாகவும், அதற்கு பதில் அளித்த விராட் கோலி என்ன சொல்கிறீர்கள்?? என்று கேட்டதாகவும் வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
அதற்கு தான் விராட் கோலியை அடிக்கடி டிவியில் பார்ப்பதால் தன்னுடைய கனவில் வந்திருக்கலாம் என்று கூறியதாகவும், விராட் கோலியை டிவியில் அடிக்கடி பார்ப்பதால் அவரை என் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.