மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!
வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ஆம் தேதி அன்று பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஜூன் மூன்றாம் தேதி அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
ஆனால் இந்த கல்வியாண்டில் கடுமையான வெயிலினால் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1 அன்று திறக்கப்படவில்லை. வாட்டி வதைத்து வந்த வெயிலினால் இரண்டு வாரங்கள் கழித்து தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதனை அடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 43,094 சத்துணவு மையங்கள் மூலமாக 44.72 லட்சம் மாணவ மாணவியர்களும் 54, 439 குழந்தைகள் மையங்கள் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளும் இந்த உத்தரவின் மூலம் பயன்பெறுவர்.