பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

0
364

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் இந்த தடுப்பூசிகளை செலுத்தும் பொழுது சிலருக்கு கைகளில் வலிகள் இருந்ததாக சொல்லப்பட்டது. எனவே வலி இல்லாத முறையில் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டது.

இதன் விளைவாக அந்த நிறுவனம் இன்கோவேக் என்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்தை வைத்து பல்வேறு சோதனைகளும் நடைபெற்றன. பின்னர் அவற்றை, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளும் வகையிலான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து  பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றது. இதன் மூலம் உலகிலேயே முதல்முறையாக நாசி வலியை தடுப்பு மருந்தை செலுத்தும் முறையை கண்டுபிடித்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றது.

இதனை அடுத்து டிசம்பர் மாத இறுதியில் மத்திய அரசு நாசி வழி தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அடுத்து உள்நாட்டிலேயே தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் குடியரசு தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திரா சிங், பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் இணை மேலாண் இயக்குனர் சுசித்ரா எல்லா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சூக் மாண்டவியா இதனை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி கோவாக்சின், கோவிஷுல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸாக நாசி வழி தடுப்பு மருந்தை மூக்கு வழியே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் முதல் 2 டோஸாகவும், பூஸ்டர் டோஸாகவும் இந்த மருந்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது உலகில் இதுவே முதல் முறையாகும்.

ஊசி இன்றி, வலி இன்றி செலுத்தப்படும் இந்த மருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நாசி வழியே செலுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறும்போது, இந்த கொரோனா  எடுத்துக் கொள்ளும் முறை எளிது. இதை செலுத்திக்கொண்ட பின்னர் மூன்று வகையான நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இதனால் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.ஏ. மற்றும் டி செல் ஆகிய எதிர்ப்பு சக்தி கிடைக்க பெறும். இதுவரை உலகில் வேறு எந்த தடுப்பூசிகளும் இதுபோன்ற 3 எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். 

வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தைக்கு வரும் இந்த மருந்தை 18 வயது மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள முடியும். இந்த மருந்தின் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ. 800க்கும் அரசு மருத்துவமனைகளில் ரூ.325க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இதையடுத்து உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் விற்பனை தொடங்கி விட்டது. எல்லா பவுண்டேசன் மற்றும் யூ.டபிள்யூ.-மேடிசன் குளோபல் சுகாதார மையம் இடையேயான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் தொடங்கியுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா அறிவித்து உள்ளார். 

மேலும் நவீன தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார கல்வி ஆகியவை முதன்முறையாக இந்தியாவில் நிறுவப்பட இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி 2 நாட்களுக்கு முன்னரே இன்கோவேக் மருந்து அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவை வரவுள்ளது.

இந்த மருந்தை செலுத்துவதற்கு என்று தனியே ஊசிகளோ, ஆல்கஹால் துடைப்பானோ, கட்டு போடும் துணி என எதுவும் தேவையில்லை. கொள்முதல், விநியோகம், சேமித்து வைத்தல் மற்றும் உயிர் மருத்துவ கழிவுகள் அகற்றம் என எல்லா வகையிலும் செலவுகள் மிச்சப்படுத்தப்படும்.

 

Previous articleஇபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
Next articleநீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!