உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊரடங்கால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த மாவட்டங்களை முடக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதற்கென பட்டியல் இன்று வழங்கியுள்ளது, அந்த பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வடமாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட எந்த சேவையும் வழங்கப்படாது, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்க வழிவகை செய்யப்படும். இந்த மாவட்டங்களை முடக்க காரணம் மேற்கொண்டு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
இதனை புரிந்து கொண்டு மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.