ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து!!

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து. பத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து. இலவச பேருந்து நாங்கள் கேட்டோமா ஏன் எங்களை அசிங்கப்படுத்துகிறீர்கள் என பெண் பயணிகள் வேதனை.

கடலூர் மாவட்டம், புவனகிரி புதிய பாலம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கட்டிடம் கட்டுமான பணிக்கு சென்று திரும்பிய பெண் கூலி தொழிலாளிகள் பத்துக்கு மேற்பட்டோர் நின்றனர்.

அப்போது சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு பேருந்து தடம் எண் 31 இவர்களை ஏற்றாமல் சென்றது. இந்த பேருந்து புவனகிரி வழியாக தெற்குதெட்டை, சாத்தப்பாடி, ஆடுர் வழியாக குறிஞ்சிப்பாடி செல்கின்றது.

கிராமப்புறங்களில் செல்லும் அரசு பேருந்தை நம்பி தான் நாங்கள் பயணிக்கின்றோம். ஆனால் புவனகிரி பேருந்து நிறுத்தம் இடத்தில் பெண் கூலித் தொழிலாளிகள் ஓடிச் சென்று பேருந்தில் ஏற முற்பட்ட போது அரசு பேருந்து நடத்துனர் அவர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கையைப் பிடித்து இறக்கி விட்டு அடுத்த பேருந்தில் வா என்று ஒருமையில் பேசிவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து பெண் கூலி தொழிலாளிகள் தெரிவிக்கும் போது நாங்கள் இலவச பேருந்து கேட்கவில்லை ஏன் எங்களை அரசு இலவச பேருந்து பயணம் என்று கூறி அவமானப்படுத்துகிறது. என்று வேதனையோடு தெரிவித்தனர்.

அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் எங்களை தரை குறைவாக நடத்துவதாகவும் பெண்கள் கைய நீட்டினால் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இரவு நேரத்தில் அதுவும் 9 மணி கடந்தும் பேருந்துக்காக காத்திருந்த பொழுது பேருந்து நிற்காமல் செல்வதும், நின்றாலும் பெண் பயணிகளை ஏற்றாமல் செல்வது மனை வேதனை தருவதாக தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு இதனை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் பெண் பயணிகள்.