பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!
கடந்த ஜனவரி 26-ந் தேதியன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொரோனா பரவல் காரணமாக ஒருசில கட்டுபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் டெல்லியில் மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அதில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சென்று காட்சிபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த ஊர்திகள் தமிழகம் முழுவதும் மக்களின் பார்வைக்கு சென்று வர ஜனவரி 26-ந் தேதியன்று சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மக்களின் பார்வைக்கு சென்று வந்த அந்த ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களின் பார்வைக்காக பிப்ரவரி 20 முதல் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, பொதுமக்களின் கோரிக்கையையடுத்து அந்த அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலத்திற்கு அதே இடத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.