அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

0
246
#image_title

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!!

தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு தடையாகவும் இருந்து வருகிறார்.

அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

இந்திய சரித்திரத்தை மாற்றும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஆளுநருக்கு அழகல்ல. ஆளுநர் தனது பணியை மட்டும் செய்ய குடியரசு தலைவர் அறிவுறுத்த வேண்டுமென தமிழக பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கதக்கது.

ஆளுநர்கள் மிரட்டினால்தான் பணிவார்கள் என்பது, ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மிக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் தெரிகிறது. அரசியல்வாதிகள் போல செயல்படும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இனியாவது ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

புதுச்சேரியில் கலாச்சாரத்தை அழிக்கும் வகையில், அரசுக்கு வருவாய் வேண்டும் என்பதற்காக மதுவை விற்க முதல்வர் ரங்கசாமி நல்ல நல்ல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றார். அதன் விளைவாகத்தான் பீர் பஸ் இயக்க உள்ளார்.

மதுக்கடைகள் அதிகம் திறந்ததால், சமீபத்தில் மது போதையில் ஏற்பட்ட விபத்தால் ஒரு இளைஞர் உயிரை பறிகொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு ஆட்சியாளர்கள் வெட்கி தலைக்குனிய வேண்டும் என்றும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அரசின் அனுமதியில்லாமல் மதுபான விடுதிகளில் குத்தாட்டமும், கூத்தாட்டமும் நடைபெறுகின்றது என குற்றம் சாட்டினார்.

மேலும் புதுச்சேரியில் மதுவினால் விதவைகள் அதிகமாகி, ஆண்களின் விகிதாச்சாரம் குறைந்து வருகின்றது. உடனடியாக ரெஸ்ட்டோ பார்களை மூட வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.