2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.
70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஜேசன் ராய் ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அவரது இந்த திடீர் அறிவிப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரை வாங்கும் எண்ணம் ஒரு துளி கூட இல்லை என்று குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.