ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Photo of author

By Anand

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றுவது நடைபெற்று வருவதால் அதையெல்லாம் கவனிக்க கேமராவுடன் கூடிய டிரோன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான் கும்மிடிப்பூண்டி சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தைலத்தோப்பில் இணைந்திருந்த காதலர்கள் இந்த டிரோனை பார்த்ததும் வாகனத்தை எடுத்து கொண்டு பறந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க 144 தடை உத்தரவை பிறப்பித்து அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு வைரஸ் தொற்று உள்ள பகுதிகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள சாலைகளை தடுப்பு கட்டைகளால் மறித்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு உத்தரவின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் இந்த பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறு ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஊரடங்கு உத்தரவை மீறி தைல தோப்பில் மறைவாக இணைந்திருந்த காதல் ஜோடி, ஏரிக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் விளையாடிய இளைஞர்கள், என காவல் துறையினரின் ட்ரோன் கேமராவில் பதிவானது.

இதனையடுத்து காவலர்கள் டிரோன் கேமரா மூலம் தங்களை கண்காணிப்பதை அறிந்த காதல் ஜோடி இருச்ககர வாகனத்தை எடுத்து கொண்டு பதறியடித்து பறந்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நேரத்தில் காதல் ஜோடிகள் தைல தோட்டத்தில் தஞ்சமடைந்தது அப்பகுதி பொது மக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது.