மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!
சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,
சென்னையை அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சரண்யாவுக்கு அவரது மகனை பள்ளியின் தாளாளர் மீனாட்சி வயது 42, கை கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சரண்யா கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மீனாட்சியிடம் கேட்டபோது அவர் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சரண்யாவை தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.
இதன் காரணமாக மன வேதனை அடைந்த சரண்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதும் தட்டி கேட்ட சரண்யாவை விரட்டியதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் பள்ளியின் தாளாளர் மீனாட்சியின் மீது, கொலை மிரட்டல் விடுத்தல், கொடுமைப்படுத்துதல், உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான பள்ளியின் தாளாளர் மீனாட்சி பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.