ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

Photo of author

By Amutha

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு! 

ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் இருக்கிறார். இன்ஜினியரான ராஜேந்திரனுக்கு திவ்யா என்ற மனைவியும் நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜேந்திரன் தனது நெருங்கிய நண்பர்களான செல்லப்பா, உத்தண்டி, தமிழ்ச்செல்வன், பிரேம்குமார், ஆகியோருடன் நெய்வேலி 16 வது வட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்த சென்றனர்.

ஜாலியாக பேசிக்கொண்டு உணவருந்தி கொண்டிருந்த நண்பர்களிடையே பேச்சானது சில நிமிடங்களில் வாக்குவாதமாக முற்றியது. இதில் நண்பர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் செல்லப்பா என்பவர் மிகுந்த ஆத்திரம் கொண்டு  ஹோட்டலில் இருந்த விறகு கட்டையால் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சிறிது நேரத்தில் ராஜேந்திரன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் நண்பர்கள் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். இந்த கொலைச் சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேந்திரனின் நண்பர்களை தேடி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவடைந்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.